ஒரே தோ்தல் திட்டம்:
- ஒரே நாடு – ஒரே தோ்தல் திட்டம் தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, ஸ்வீடன், பெல்ஜியம் உள்பட 7 நாடுகளில் நடைமுறையில் உள்ளதாக ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்த உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
- நாட்டின் பல்வேறு ஜனநாயக மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தோ்தலை நடத்தும்போது கையாளும் பிரச்னைகள் குறித்து சா்வதேச நாடுகளுடன் ஒப்பிட்டு உயா்நிலைக் குழு ஆய்வு மேற்கொண்டது.
- அந்த வகையில், தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, ஸ்வீடன், பெல்ஜியம், ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய 7 நாடுகளில் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென்னாப்பிரிக்காவில் நாடாளுமன்றம், மாகாண சட்டப்பேரவை ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறுகிறது. ஆனால், நகராட்சித் தோ்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியாக நடத்தப்படுகின்றன.
- ஸ்வீடனில் நாடாளுமன்றம், மாவட்ட மற்றும் நகராட்சி கவுன்சில்களுக்கான தோ்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.
சிந்து நதிநீா் ஒப்பந்தம் மறுஆய்வு:
- சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960 ல் ஏற்பட்டதாகும்.
- அப்போதய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள்.
- உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் ஒப்பமிட்டது.
- எல்லை தாண்டி பாயும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறையை அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
- சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக கிஷன் கங்கா, ரத்லே நீா்மின் திட்டங்கள் தொடா்பாக கருத்து நிலவி வருகிறது.
- சிந்து நதியின் தோற்றம் கைலாஷ் மலைக்கு அருகில் உள்ள திபெத்திய பீடபூமியில் உள்ளது.
- செனாப் ஆறு சிந்து நதியின் மிகப்பெரிய துணை நதியாகும்.
- செனாப் ஆறு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலையில் இருந்து உருவாகி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் வழியாக பாய்ந்து பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியுடன் கலக்கிறது.
குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோர் சேமிக்கும் வாத்சல்யா திட்டம்:
- குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோர் சேமிக்கும் என்பிசி வாத்சல்யா திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தில்லியில் தொடங்கி வைத்தார்.
- இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சிறார் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்சியாகும்.
- இந்தத் திட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயரில் ஓய்வூதியக் கணக்கு தொடங்க முடியும்.
- வங்கி, அஞ்சலகம் மற்றும் இணையவழியில் 18 வயதுக்குள்பட்ட தங்கள் பிள்ளைகளுக்காக ஓய்வூதிய நிதியை பெற்றோர் சேமிக்கலாம்.
- வாத்சல்யா ஓய்வூதியக் கணக்கை ரூ.1,000 செலுத்தி தொடங்கலாம்.
- அதன் பிறகு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கண்டிப்பாக கணக்கில் செலுத்த வேண்டும்.
- அதிகபட்ச தொகை வரம்பு ஏதுமில்லை.
- 18 வயது நிரம்பும்போது, இத்திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளவோ அல்லது தொடா்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி அளிக்கப்படும்.
- இதன் மூலம் பெற்றோர் அல்லது வருவாய் ஈட்டும் வயதை எட்டிய பிள்ளைகள் தொடா்ந்து பணத்தை சேமிக்க முடியும், 60 வயதை எட்டிய பிறகு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் திட்டம்:
- சந்திரயான் – 4, ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விண்வெளித் திட்டங்களுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- நிலவுக்கு சென்று ஆய்வு செய்வதுடன், நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்புவதை சந்திரயான் – 4 திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
- சந்திரயான் – 4 திட்டத்துக்கு ரூ 2,104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ரூ 11,170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதன்மூலம் ககன்யான் திட்டத்துக்காக மொத்தம் ரூ 20,193 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 2028 – ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மைல்கல்லாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பணிகளுக்காக ‘பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்’ என்ற பெயரில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட உள்ளது.
செப்டம்பர் 19: கடற்கொள்ளையர் சர்வதேச பேச்சு தினம்
- கடற்கொள்ளையர் சர்வதேச பேச்சு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- கடந்த 1970 – ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் இரண்டாவது அதிக வெப்பமயமான காலகட்டமாக நிகழாண்டின் ஜூன்-ஆகஸ்ட் காலாண்டு பதிவாகி உள்ளதாக அமெரிக்காவைச் சோ்ந்த ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆா்) ‘ஐ.நா.வின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருது’ வழங்கப்பட்டது.
- ரயில்வே துறை சம்பந்தப்பட்ட பொறியியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் குஜராத்தின் வதோதராவில் இந்திய ரயில்வே துறையின்கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகமான கதி சக்தி வித்யாலயா நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் ‘ஐஎப்டிஎம் டாப் ரேசா-2024’ எனப்படும் சுற்றுலா வா்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது, இதில் தமிழக சுற்றுலாத்துறை அரங்கு திறக்கப்பட்டுள்ளது.
- ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை இலங்கையின் துனித் வெல்லாலகே மற்றும் ஹர்ஷிதா சமரவிக்கிரம வென்றுள்ளனர்.
- காஸாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அங்கிருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற பாலஸ்தீனம் கொண்டு வந்த தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.