மத்திய அரசின் கடன் ரூ.185 லட்சம் கோடியாக உயரும்:
- மத்திய அரசின் மொத்த கடன் ரூ.78 லட்சம் கோடியாக உள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 58.2 சதவீதமாகும்.
- இதில் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன், உள்நாட்டில் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட கடன் உள்ளிட்டவை அடங்கும்.
- இந்த கடன் 2024-25 நிதியாண்டின் இறுதியில் ரூ.185 லட்சம் கோடியாக உயரும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 8 சதவீதமாக இருக்கும்.
- 15 – ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசுகள் அதன் மொத்த மாநில உற்பத்தியில் 4 சதவீதம் அளவுக்கு கடன் வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மூலதனச் செலவுகள் அதிகரிக்கும்போது மாநில அரசுகள் கூடுதல் கடன் வாங்க அனுமதிக்கப்படுகிறது.
- மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதியுதவிகளை மத்திய அரசு தேவைக்கு ஏற்ப வழங்கி வருகிறது.
- பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாவிட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்பட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது.
- ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரத்தில் உள்ள 7 பின்தங்கிய மாவட்டங்களுக்கு தலா ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு நீதி ஆயோக் பரிந்துரைத்தது.
- இதன்படி ஆந்திரத்துக்கு இதுவரை ரூ.1,750 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிகாரில் 65% இடஒதுக்கீடு ரத்து:
- அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்திய பிகார் அரசின் அரசாணையை பாட்னா உயா்நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
- பிகார் மாநிலத்தில் கடந்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- அதன் அடிப்படையில் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்துவதாக அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு அறிவித்தது.
தமிழ்நாடு 69% இடஒதுக்கீடு:
- தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்குகிறது.
- கம்யூனல் ஜி.ஓ மூலம் சாதி அடிப்படையில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு செம்பகம் துரைராஜன் வழக்கு மூலம் ஆபத்து வந்த போது தமிழகமே கொந்தளித்தது.
- அதன் காரணமாக, நேரு முன்வந்து இந்திய அரசியல் சட்டத்தில் 1951-ம் ஆண்டு, முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
- 1971 – வரை தமிழ்நாட்டின் மொத்த இட ஒதுக்கீடு 41%ஆக இருந்தது.
- 1969 இல் அண்ணாதுரையின் மறைவைத் தொடர்ந்து, திமுகவின் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆராய சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார்.
- பின்னர் 1990 ல், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கருணாநிதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை பிரித்தார்.
- ST – க்களுக்கு வழங்கப்பட்ட 1% இட ஒதுக்கீடு, தமிழகத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது.
- 1992 – ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் இந்திரா சாஹ்னி மற்றும் பிறர் மற்றும் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பிறர் வழக்குக்கான தீர்ப்பை வழங்கியது.
- பிரிவு 16 (4) இன் கீழ் உள்ள மொத்த இட ஒதுக்கீடு, 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
- அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான குழு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக அரசின் சட்டம் எந்த நீதிமன்றத்திலும் அதற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாத படி, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
- இது தமிழகத்திற்கான 69% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது, இந்த சட்டம் அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழும் கொண்டு வரப்பட்டது.
புத்தகப்பை இல்லா திட்டம்:
- 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிகளுக்கு வரும் நாள்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
- மாணவ-மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தமில்லாமலும் கல்வி கற்பதற்காக ஆண்டு முழுவதும் 10 நாள்களுக்கு இந்த நடைமுறை தேசிய கல்விக் கொள்கை, 2020-இல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
- புத்தகம் மூலம் அறிவை பெறுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கான இடைவெளியை குறைப்பதோடு மாணவ-மாணவிகளின் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- மட்பாண்டங்கள் செய்தல், தோட்டக்கலை, உலோகம், எலெக்ட்ரிக் பணிகள் என பல்வேறு திறன்சார் பயிற்சிகளை மாணவ-மாணவிகள் தோ்வு செய்து கொள்ளலாம்.
‘குவாட்’ கூட்டறிக்கை:
- எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது என குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- கிழக்கு மற்றும் தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை மறைமுகமாக சாடும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் ஜெய்சங்கா் கலந்து கொண்டார்.
ஜூலை 30: சர்வதேச நட்பு தினம்
- வாழ்க்கையில் நண்பர்கள் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூலை 30: ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்
- ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம், 2013 ஆம் ஆண்டு முதல் ஜூலை 30 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
தகவல் துளிகள்:
- மாணவா்கள் தற்கொலை செய்வதை தடுப்பதற்காக மனோதா்பன் முன்னெடுப்பை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. அதன்படி மாணவா்களுக்கு வல்லுநா்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
- ராணுவத்துக்கு நவீன வழிகாட்டும் கருவிகளை, சென்னை ‘பெல்’ நிறுவனத்திடம் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகா் அணையும், கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணையும் கட்டப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு வேளாண்மையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் விடை கிடைக்கவுள்ளது. இதற்கான தனித்த செயலியை சிங்கப்பூா் பல்கலைக்கழகத்தின் துணையுடன் தமிழக அரசு உருவாக்க உள்ளது.
- சிறப்பாக சமூக சேவை செய்துவரும் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு தமிழக அரசு விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- வெனிசூலா அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் நிக்கோலஸ் மடூரோ 3-ஆவது முறையாக வெற்றி பெற்றார்.
- ஆடவா் ஒற்றையா் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.